எல்லாம்வல்ல இயற்கை நம்மை தோற்றுவித்து, நம்மை வளர்த்து, அழித்துவிடுகிறது.
ஆக தோன்றும் உயிர்கள் அழிந்தே தீரும். இதுதான் இயற்கை. நாம் பரம்பொருளிடமிருந்து வந்தோம்.
நம்மில் பரம்பொருளின் கூறு உள்ளது. மீண்டும் பரம்பொருளை அடைந்தால் நாம் அழியமாட்டோம்.
இயற்கையின் பிடியிலிருந்து தப்பிப்போம்.
எந்த ஒரு செயலும் நம் ஆன்மாவை நஷ்டப்படுத்திக் கொண்டே வருகிறது. இறுதியில்
இந்த உடல் முதுமை அடைந்து நோய்க்கு இலக்காகி வீழ்ந்து விடுகிறது. எது நம்மை தோற்றுவித்து
நம்மை வளர்த்து அழிக்கிறதோ, அதனிடமிருந்தே அழியாமல் இருக்கும் வழியை அறிந்தவர்கள் சித்தர்கள்.
ஒவ்வொரு செயலிலும் நஷ்டமாகும் தேகத்தைப் பற்றி அறிந்து, அந்த தேகத்தை நஷ்டத்திலிருந்து
பாதுகாத்து, தேகத்தோடு இறைவனிடத்து இரண்டற கலந்தவர்களே சித்தர்கள்.
இந்த நிலையை அடைய வேண்டும் என்பது மனிதன் தேகம் எடுத்ததன் இலட்சியம். இந்த
இலட்சியத்தை மறந்து எடுத்த தேகத்தை நஷ்டமாக்கி, நோக்கத்தை மறந்து இறந்து போகிறான்.
சித்தர்கள் வணங்குவதே குறிக்கோளாக, பணிவாக, வைராக்கியமாக இருக்க வேண்டும்.
எப்படி தனக்கு விருப்பமான ஒரு செயலிலே ஈடுபட மனம் உறுதியாய் நின்று இயங்குகிறதோ, அதுபோன்று
இறைவனை வணங்குகிற விஷயத்திலும் இந்த மனம், அறிவு இரண்டும் ஒன்றாய் நின்று இயங்க வேண்டும்.
இந்த வைராக்கியம்தான் ஞானத்தைப் பெற்றுத் தரும்.
வைராக்கியம் கொண்டால் அதில் உறுதியாக இருப்பதற்கும் புண்ணியம் வேண்டும்.
புண்ணியம் இல்லையென்றால் வைராக்கியம் இருக்காது. இறைவனை அடைய, இரண்டற கலக்க, இறைவனோடு
ஒன்றியிருக்க வைராக்கியமாகிய தவமே அவசியமாகும். அல்லும்பகலும் இறைவனை சதாசர்வ காலமும்
நினைத்தலும், போற்றுதலும், அவர்களது பெருமைகளை சிந்தித்தலும், இறைவனின் மறுபிம்பங்களான
உயிர்களிடத்து அன்பு செலுத்துதலுமே தவமாகும். இப்படிப்பட்ட வைராக்கியத்துடன் இருந்தால்
இறைவனை அடையலாம்.
No comments:
Post a Comment