மனிதனாய்
பிறந்தவனுக்கு மட்டுமே வாழ்க்கை நெறிமுறை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள
ஜீவராசிகளுக்கு நெறிமுறை இல்லை. ஏனென்றால் மனிதன் மட்டுமே தன்னை படைத்த இறைவனை
அடைவதற்காக படைத்த படைப்பு. நாம் படைத்த ஜீவராசிகளிலே தன்னை அறிய ஒரு படைப்பு
வேண்டும் என்பதற்காகத்தான் ஆறறிவு உடைய மனிதனை படைத்தார்.
நாமெல்லோரும்
நமது ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்ள வேண்டும். இறைவனின் மறுபிம்பமாக இருக்கும்
மனித குலத்திற்கு பசியாற்றுவித்தல் இறைவனுக்கு செய்யும் தொண்டு. இராமலிங்கசுவாமிகள்,
“ஒரு சகோதர உயிர் துன்பப்படுவதை கண்டு இன்னொரு சகோதர உயிர் துன்பப்படவில்லை எனில்,
அவனுடைய மனம் அவ்வளவு கடினமானதாக உள்ளது. அவ்வளவு பாவம் செய்துள்ளது என்பதாம்” என்றார்.
மனிதனிடத்தும்
மற்ற உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும். நம்மால் இயன்ற உதவிகளை செய்ய
வேண்டும். உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உண்ணக் கூடாது. அசைவத்தை அடியோடு விட
வேண்டும். இராமலிங்க சுவாமிகள், “கொல்லா நெறியே குருஅருள் நெறியென பல்கால் எனக்கு
பகர்ந்த மெய்ச்சிவமே” என்றார். கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வருக
என்றார் இராமலிங்கசுவாமிகள். உயிர்களிடத்து கருணை ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடித்
தரும். ஆன்மா ஆக்கம் பெற்றால்தான் அறிவு தெளிவாக இருக்கும். இல்லையெனில் மனம்
ஒன்று சொல்லும், அறிவு ஒன்றை செய்யும். மனம் பஞ்ச பூதங்களின் வழி செல்லக்கூடியது.
ஆனால் அறிவு பிறர் நமக்கு அறத்தைக் கூறினால் அதை அறியக்கூடியது. அதை அறிய தயையை
வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்கு பசியாற்றுவித்தல் என்னுடைய செல்வம்
குறைகிறதே என்று ஒருவன் சொன்னால், அதற்கு திருவள்ளுவப்பெருமான், “கூத்தாட்டு அவைக்
குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.” என்று தனது 332வது குறளில்
கூறுகிறார். செல்வம் ஒருவனை விட்டு எப்படி போகுமென்றால், கூத்து முடிந்ததும் அங்கே
கண்டு களித்த மக்கள் அந்த இடத்தைவிட்டு அகலுதல் போலாகும். என்றார். சிறுக சிறுக கூட்டத்தை
சேர்த்து, கூத்தை தொடங்கினால் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்துவிடும். அங்கே ஒருவரும்
இருக்க மாட்டார். ஆகவே செல்வம் நிலையில்லாதது. அந்த செல்வத்தை கொண்டு நிலையான ஒன்றை
செய்து கொள்ள வேண்டும். நிலையில்லாத செல்வத்தைக் கொண்டு நிலையானதை செய்தால், அதுவே
வாழ்க்கைக்கு துணையாக இருக்கம். நீ தருமத்திற்கு செலவு செய்ய பணம் நம் கையை விட்டு
போகிறதே என்று எண்ணாதே, அது புண்ணியமாய் மாறி உன்னுடனேயே நிலையாக தங்கிவிடும்.
ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொண்டால் அறிவு
தெளிவடையும். அறநெறி வழி செல்ல துணையாக இருக்கும். ஆக்கம் இல்லையெனில் படித்திருப்பான்
அறிவு வேலை செய்யாது. ஆகவே படிப்பு வேறு ஆக்கம் வேறு. இன்று படித்தவன்தான் முக்கால்வாசி
தவறகளை Hitech முறையில் செய்கிறான். ஆகவே ஒருவன் எவ்வளவு படித்து பெரிய விஞ்ஞானியாக
இருந்தாலும் சரி, அவன் ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்ளவில்லையெனில், அவனுடைய அறிவு
அவனை அழித்துவிடும். ஆகவே ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்வோம். அறம் வழி நடப்போம்.
No comments:
Post a Comment