Saturday, 27 January 2018

புலனொடுக்க தியானம்



இந்த உலகத்தில் தாயின் கருவறையில் பத்துமாத காலம் ஈசனின் கருணையினால் கருவாய் உதித்து உடம்பு வளர்ந்து இவ்வுலகினில் பிறக்கின்றான். இந்த உடம்பில் ஈசன் இருப்பதை உணராமல், தன்னுள் உள்ள தீயைக் கொண்டு ஈசனை அடையாமல், காமத்தின் வழியில் சென்று அற்புதமான இந்த உடலை இழக்கின்றான். இந்த உயர்ந்த மானுட பிறவியின் அற்புதத்தை உணராமல் நீராக நின்ற வாலையான உயிர்போய் மண்ணாகிறான்.
நம்முடம்பில் சூரிய, சந்திர, அக்னி என மூன்று மண்டலங்கள் உள்ளன. காற்று என்கிற பிராணன், மண் என்கிற உடம்பு, நீர் என்கிற இரத்தம், நெருப்பு என்கிற உஷ்ணம், ஆகாயம் என்கிற சிந்தை இவற்றைப் பற்றி அறியாமலே அநியாயமாக இவ்வுலக கலிமாயையில் ஆழ்ந்து இறந்து போகிறோம். இதை அறிய சித்தர்கள் துணை தேவை.
தன்னை அறிய முற்பட்டால் தானே வருவார் சித்தர். முதலில் தன்னைப் பற்றியும், தன்னைப் படைத்தவனைப் பற்றியும், தன்னைப் படைத்த காரணத்தைப் பற்றியும் தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது அமைதியாக தியானத்தில் அமர்ந்து சிந்திக்க வேண்டும். முதலில் ஐந்து நிமிடம் பழகி நாளாக நாளாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் அமரலாம். ஆனால் கஷ்டமாக இருந்தாலும் முதலில் ஆர்ப்பரித்த மனது, நாளாக நாளாக தானாகவே புலனொடுக்கம் ஆகும். புலனொடுக்க சுகம் ஒரு மணி நேர தியனத்தில் ஒரு சில நிமிடங்களே கிடைத்தாலும் அந்த சுகத்தை உணர்ந்துவிட்டால் தியானம் உங்களை பிடித்துக் கொள்ளும்.
உங்களுடைய கேள்விகளுக்கு அங்கே விடை கிடைக்கும். இந்த ஆகாயத்தில் வெட்டவெளியில் இருந்து உங்களுடைய கேள்விகளுக்கு, புலனொடுக்க நேரத்தில் விடை கிடைக்கும். பெரிய பெரிய அறிஞர்கள் ஆராய்ச்சி செய்யும்பொழுது மனம் ஒன்றிய நேரத்தில் ஆகாயத்தில் இருந்து கிடைத்ததுதான் இந்த விஞ்ஞான கண்டுபிடிப்புகள். அவ்வளவு சிக்கலான விஞ்ஞான கண்டுபிடிப்புகளே ஆகாயத்தில் கிடைக்கும்பொழுது, தான் பிறந்த காரணத்தை, இந்த மனித தேகத்தை அறிய சித்தர்களை எண்ணி பூஜித்து, புலனொடுக்க தியானத்தில் இருந்தோமானால் நமக்கும் அருள் செய்வார்கள். அந்த விடை கிடைத்து வாழும் வாழ்க்கையே பிறவியின் பெரும் பேறாகும்.
இந்த தியானத்திற்கு தேவை அமைதியான அறை, நறுமணமுள்ள சூழ்நிலை, நிசப்தம், ஒரு தீபம், சித்தர்களை மனதார பூஜித்தல். குறிப்பாக ஈ, எறும்பு, கொசு இருக்கக் கூடாது. நீங்களாக எழுந்திரிக்கும் வரை, யாரும் உங்களை தியானத்தில் இருந்து எழுந்திரிக்க சொல்லக் கூடாது.
முதலில் மனம் ஒன்றாவிட்டாலும் பரவாயில்லை. முடிந்தவரை அமர்ந்து இவ்வுடலை பழக்கப்படுத்துங்கள். அறிவு சரியென்று சொன்னாலும், புலன் வழியே வெளியே செல்ல துடிக்கும் மனது உங்களை தியானத்தில் அமரவிடாது. அமர்ந்து புலனொடுக்க சுகத்தை கண்டுவிட்டால், அப்புறம் விடமாட்டீர்கள்.

ஜீவகாருண்யம்


பசியை நீக்கித் திருப்தி இன்பத்தை உண்டாக்குகின்ற ஜீவகாருண்யம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழ வேண்டும். ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்.
- மகான் இராமலிங்க சுவாமிகள் - ஜீவகாருண்ய ஒழுக்கம்.
ஆகவே ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்களுக்கு சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவை வேண்டா.
இவைகள் இல்லாமலே எக்காலத்தும் அழியாத இன்ப வீட்டை அடைய முடியும்.
இப்போது நாம் கொண்டு வந்திருக்கும் தேகமென்னும் வீடு அழிகின்ற தன்மை கொண்டது. பிறருக்கு பசியாற்றுவிக்கின்ற ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடித்து ஜீவகாருண்யமென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலை இளமை காலமுள்ள போதே சம்பாதித்துக் கொண்டால் மோட்ச வீட்டை ஜீவகாருண்யமென்கிற திறவு கோலை கொண்டு திறந்து நித்திய முத்தராய் வாழலாம் என்கிறார்.
ஆகவே யோகம் தேவையில்லை, சரியை தேவையில்லை, கிரியை தேவையில்லை, ஞானம் தேவையில்லை. ஒன்றே ஒன்று பசியாற்றுவித்தலே, அது போதும். வேறெதுவும் வேண்டா.
ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை கொண்டு எல்லா உயிர்களையும் தன் சகோதர உயிர்களாக எண்ணி அந்த உயிர்களிடத்து அன்பு செலுத்தி கூடுமானவரை அவ்வுயிரின் துன்பங்களை போக்கவல்லவரே மோட்ச வீட்டுக்கு செல்ல தகுதியானவர்.

Wednesday, 24 January 2018

ஆன்மாவிற்கு ஆக்கம்

மனிதனாய் பிறந்தவனுக்கு மட்டுமே வாழ்க்கை நெறிமுறை. ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை உள்ள ஜீவராசிகளுக்கு நெறிமுறை இல்லை. ஏனென்றால் மனிதன் மட்டுமே தன்னை படைத்த இறைவனை அடைவதற்காக படைத்த படைப்பு. நாம் படைத்த ஜீவராசிகளிலே தன்னை அறிய ஒரு படைப்பு வேண்டும் என்பதற்காகத்தான் ஆறறிவு உடைய மனிதனை படைத்தார்.
நாமெல்லோரும் நமது ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்ள வேண்டும். இறைவனின் மறுபிம்பமாக இருக்கும் மனித குலத்திற்கு பசியாற்றுவித்தல் இறைவனுக்கு செய்யும் தொண்டு. இராமலிங்கசுவாமிகள், “ஒரு சகோதர உயிர் துன்பப்படுவதை கண்டு இன்னொரு சகோதர உயிர் துன்பப்படவில்லை எனில், அவனுடைய மனம் அவ்வளவு கடினமானதாக உள்ளது. அவ்வளவு பாவம் செய்துள்ளது என்பதாம்”  என்றார்.
மனிதனிடத்தும் மற்ற உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும். நம்மால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும். உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உண்ணக் கூடாது. அசைவத்தை அடியோடு விட வேண்டும். இராமலிங்க சுவாமிகள், “கொல்லா நெறியே குருஅருள் நெறியென பல்கால் எனக்கு பகர்ந்த மெய்ச்சிவமே” என்றார். கொலை புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வருக என்றார் இராமலிங்கசுவாமிகள். உயிர்களிடத்து கருணை ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடித் தரும். ஆன்மா ஆக்கம் பெற்றால்தான் அறிவு தெளிவாக இருக்கும். இல்லையெனில் மனம் ஒன்று சொல்லும், அறிவு ஒன்றை செய்யும். மனம் பஞ்ச பூதங்களின் வழி செல்லக்கூடியது. ஆனால் அறிவு பிறர் நமக்கு அறத்தைக் கூறினால் அதை அறியக்கூடியது. அதை அறிய தயையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பிறருக்கு பசியாற்றுவித்தல் என்னுடைய செல்வம் குறைகிறதே என்று ஒருவன் சொன்னால், அதற்கு திருவள்ளுவப்பெருமான், “கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று.” என்று தனது 332வது குறளில் கூறுகிறார். செல்வம் ஒருவனை விட்டு எப்படி போகுமென்றால், கூத்து முடிந்ததும் அங்கே கண்டு களித்த மக்கள் அந்த இடத்தைவிட்டு அகலுதல் போலாகும். என்றார். சிறுக சிறுக கூட்டத்தை சேர்த்து, கூத்தை தொடங்கினால் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைந்துவிடும். அங்கே ஒருவரும் இருக்க மாட்டார். ஆகவே செல்வம் நிலையில்லாதது. அந்த செல்வத்தை கொண்டு நிலையான ஒன்றை செய்து கொள்ள வேண்டும். நிலையில்லாத செல்வத்தைக் கொண்டு நிலையானதை செய்தால், அதுவே வாழ்க்கைக்கு துணையாக இருக்கம். நீ தருமத்திற்கு செலவு செய்ய பணம் நம் கையை விட்டு போகிறதே என்று எண்ணாதே, அது புண்ணியமாய் மாறி உன்னுடனேயே நிலையாக தங்கிவிடும்.
ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொண்டால் அறிவு தெளிவடையும். அறநெறி வழி செல்ல துணையாக இருக்கும். ஆக்கம் இல்லையெனில் படித்திருப்பான் அறிவு வேலை செய்யாது. ஆகவே படிப்பு வேறு ஆக்கம் வேறு. இன்று படித்தவன்தான் முக்கால்வாசி தவறகளை Hitech முறையில் செய்கிறான். ஆகவே ஒருவன் எவ்வளவு படித்து பெரிய விஞ்ஞானியாக இருந்தாலும் சரி, அவன் ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்ளவில்லையெனில், அவனுடைய அறிவு அவனை அழித்துவிடும். ஆகவே ஆன்மாவிற்கு ஆக்கத்தை தேடிக் கொள்வோம். அறம் வழி நடப்போம்.