Monday, 29 May 2017

வைராக்கியமே தவம்



எல்லாம்வல்ல இயற்கை நம்மை தோற்றுவித்து, நம்மை வளர்த்து, அழித்துவிடுகிறது. ஆக தோன்றும் உயிர்கள் அழிந்தே தீரும். இதுதான் இயற்கை. நாம் பரம்பொருளிடமிருந்து வந்தோம். நம்மில் பரம்பொருளின் கூறு உள்ளது. மீண்டும் பரம்பொருளை அடைந்தால் நாம் அழியமாட்டோம். இயற்கையின் பிடியிலிருந்து தப்பிப்போம்.
எந்த ஒரு செயலும் நம் ஆன்மாவை நஷ்டப்படுத்திக் கொண்டே வருகிறது. இறுதியில் இந்த உடல் முதுமை அடைந்து நோய்க்கு இலக்காகி வீழ்ந்து விடுகிறது. எது நம்மை தோற்றுவித்து நம்மை வளர்த்து அழிக்கிறதோ, அதனிடமிருந்தே அழியாமல் இருக்கும் வழியை அறிந்தவர்கள் சித்தர்கள். ஒவ்வொரு செயலிலும் நஷ்டமாகும் தேகத்தைப் பற்றி அறிந்து, அந்த தேகத்தை நஷ்டத்திலிருந்து பாதுகாத்து, தேகத்தோடு இறைவனிடத்து இரண்டற கலந்தவர்களே சித்தர்கள்.
இந்த நிலையை அடைய வேண்டும் என்பது மனிதன் தேகம் எடுத்ததன் இலட்சியம். இந்த இலட்சியத்தை மறந்து எடுத்த தேகத்தை நஷ்டமாக்கி, நோக்கத்தை மறந்து இறந்து போகிறான்.
சித்தர்கள் வணங்குவதே குறிக்கோளாக, பணிவாக, வைராக்கியமாக இருக்க வேண்டும். எப்படி தனக்கு விருப்பமான ஒரு செயலிலே ஈடுபட மனம் உறுதியாய் நின்று இயங்குகிறதோ, அதுபோன்று இறைவனை வணங்குகிற விஷயத்திலும் இந்த மனம், அறிவு இரண்டும் ஒன்றாய் நின்று இயங்க வேண்டும். இந்த வைராக்கியம்தான் ஞானத்தைப் பெற்றுத் தரும்.
வைராக்கியம் கொண்டால் அதில் உறுதியாக இருப்பதற்கும் புண்ணியம் வேண்டும். புண்ணியம் இல்லையென்றால் வைராக்கியம் இருக்காது. இறைவனை அடைய, இரண்டற கலக்க, இறைவனோடு ஒன்றியிருக்க வைராக்கியமாகிய தவமே அவசியமாகும். அல்லும்பகலும் இறைவனை சதாசர்வ காலமும் நினைத்தலும், போற்றுதலும், அவர்களது பெருமைகளை சிந்தித்தலும், இறைவனின் மறுபிம்பங்களான உயிர்களிடத்து அன்பு செலுத்துதலுமே தவமாகும். இப்படிப்பட்ட வைராக்கியத்துடன் இருந்தால் இறைவனை அடையலாம்.

Sunday, 28 May 2017

குரு

பாரப்பா மனமறிந்து குணமறிந்து பேசி
     பசிதாகம் தான்அறிந்து ஈவோர் உண்டோ
ஆரப்பா கோடியிலே ஒருவர் உண்டு
     அவர் மனதில் கவடறிந்து கருவறிந்து கொண்டு
சேரப்பா அச்சீடன் இணக்க மானால்
     தேட்டமென்ன ஏவலிடம் பொருள்தான் சிக்கும்
கோரப்பா வெகுகோடி சித்து தானும்
     கொண்டாடி அவன் குருவாய்க் குறித்துக் கொள்ளே.

குருவென்ன அன்னமது கொடுப்போன் ஆசான்
     குணமான தந்தைதாய் அவனே ஆகும்
உருவான குலதெய்வம் அவனே ஆகும்
     உருவென்றும் தோன்றாத பரமே ஆகும்
திருவான லட்சுமியும் அவனே ஆகும்
     தேட்டமுள்ள பலருசியும் அவனே ஆகும்
தருவான தருக்கள் எல்லாம் அவனே ஆகும்
     சதகோடி மந்திரமும் அவன் தான் பாரே.
                                                                                -அகத்தியரின் அமுதகலை ஞானம்
குரு என்றால் யார்?
குருவென்றால் அன்னமது கொடுப்பவன்.
குணமான தாய்தந்தையாக இருப்பான்.
குலதெய்வம் குருவே ஆவான்.
உருவில்லாத பரமாக இருப்பான்.
திருவான லட்சுமியக இருப்பான்.
தேட்டுள்ள பலருசியும் ஆவான்.
தருக்களக இருப்பான்.
சதகோடி மந்திரமும் குருவே ஆகும்.
கு என்றால் இருட்டு, ரு என்றால் வெளிச்சம். நம்முடைய மும்மலமாயை எனும் இருட்டு நீங்க, வெளிச்சமாகிய மும்மலமற்ற பரமாத்மா வெளிச்சத்திடம் அழைத்துச் செல்பவரே குரு ஆவார்.
ஆகவே குருவை வணங்கி போற்றி துதித்து பணிந்து புண்ணியத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். போற்றினால் உனது வினை அகலுமடா, பூதலத்தில் நீயும் ஒரு சித்தனாவாய் என்று சித்தர் புலத்தியர் கூறுகிறார்.
உடம்பினாற் பெற்ற பயன் ஆவதெல்லாம் திடம்பட ஈசனைத் தேடுஎன்றார் மகான் ஔவையார். குருபாரம்பரியமாக வரக்கூடிய ஞானரகசியத்தை குருவை பணிந்து, குருவின் மனம் மகிழ நடந்து, குரு உபதேசம் கேட்டு, குரு இட்ட கட்டளையை செய்து ஞானத்தை அடைய வேண்டும். குருவில்லாவிடில் இறைவனை அடைய முடியாது. குருவின் திருவடி பணிந்து கூடுவது அல்லார்க்கு அரூபமாய் நிற்குஞ் சிவம் என்பார் மகான் ஔவையார்.

ஞானத்திற்கு தலைவன் முருகப்பெருமான். அவர்வழி வந்தவர்கள் நவகோடி சித்தர்கள். “குருவே சிவமென கூறினன் நந்தி” என்பார் திருமூலர். குருவை சிவமாக எண்ணி, திருவடி போற்றி பணிந்து பூஜித்து ஞானத்தை அடைவோம்.

Thursday, 25 May 2017

இறைவன் குடியிருக்கும் இடம்

இறைவனை எங்கு தேடினாலும் கிடைக்காமல் மனிதன் அலைந்து கொண்டே இருக்கிறான். மலைகள், நதிகள், குகைகள், அடர்ந்த காடுகள், மலை அடிவாரங்கள் இது போன்ற இடங்களில் தனிமையில் அமர்ந்து இறைவன் வருவானா? நமக்கு அருள் செய்ய மாட்டானா? என்று ஏங்கி தவிப்பார்கள்.
திருஅருட்பிரகாச வள்ளலார், “அன்பெனும் குடில் புகும் அரசேஎன்று இறைவனைப் பற்றி சொல்கிறார். இறைவனை நாம் அடைய வேண்டுமென்றால், இறைவனின் பிரதி பிம்பங்களான மற்ற உயிர்களிடத்து நீ அன்பு செலுத்த வேண்டும் என்கிறார்.
மனிதன் என்பவன், பாலூட்டி இனத்தை சேர்ந்தவன், சமுதாய விலங்கு. அவன் ஒருவரை ஒருவர் சாராமல் வாழ முடியாது. இந்த உலகத்தில் பாலூட்டி உயிரினங்களுக்கு மட்டும் பாசம் அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட உயர்ந்த மனிதன், தற்காலத்தில் விஞ்ஞானத்தை நம்பி தன் வாழ்க்கையை இழந்து விட்டான், அன்பு செலுத்த மறந்து விட்டான்.

பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும், சாது சங்க தொடர்பு வேண்டும், தினந்தோறும் இறைவனை மனதார பூஜிக்க வேண்டும். எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும். 
இரக்கம் மனதில் வந்தால் இறைவன் உங்களிடத்து வருவான்.

Monday, 1 May 2017

அருட்பெருஞ்ஜோதி மந்திரம்

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
 நானில்லாமல் இவர்கள் எப்படி இருப்பார்கள்? இவர்களுக்கு என்ன உபாயம்? என்று இரமலிங்கசுவாமிகள் திருக்காப்பிட்டுக் கொள்ளும்முன் ஆண்டவரிடத்து கேட்டபொழுது, இந்த மந்திரத்தை இராமலிங்கசுவாமிகளுக்கு ஆண்டவர் உபதேசித்தார்.
இதைத்தான் இராமலிங்கசுவாமிகளும், “அருட்பெருஞ்ஜோதி மந்திரத்தை ஆண்டவர் வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்என்று சொல்வார். ஆகையால் இந்த அற்புதமான மந்திரமே நம்மை கடைத்தேற்றவல்ல வல்லதாகும்.
 நம்முடைய வாழ்க்கையில் இறைசக்தி நம்முடனே இருக்க, நாம் மேற்கொள்ளும் காரியம் வெற்றிபெற, நம் சன்மார்க்க வாழ்க்கை வாழ, நல்லதொரு சமுதாயத்திற்கு அடித்தளமாக இருக்க இந்த அருட்பெருஞ்ஜோதி மந்திரம் துணையாக இருக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிணியை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் வறுமையை விரட்டும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் திருமணத்தடையை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பண்புள்ள மனைவியைத் தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் புத்திரபாக்கியம் தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தூயசிந்தனையை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மனஅமைதியை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தியானசித்தியை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் இரக்க சிந்தனையை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் ஜீவகாருண்யத்தை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் தனிமனித ஒழுக்கத்தை தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் வாழ்க்கை நிலையாமையை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பொருள் நிலையில்லாததை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மூப்பை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறம் செய்ய வலியுறுத்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறத்தைவிட வலிமை வேறு
                             இல்லையென உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் அறமே துணை என்பதை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் உயிரைக் காப்பாற்ற வழி காண்பிக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் உயிர் உடலைப் பற்றி உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பசிப்பிணியை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் குணக்கேட்டை நீக்கும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிறர் துன்பத்தை உணர்த்தும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் பிறர் துன்பத்தை நீக்கும் அறிவைத்
                                                                                                                            தரும்.
அருட்பெருஞ்ஜோதி மந்திரம் மரணமில்லா பெருவாழ்வை தரும்.