Friday, 21 April 2017

புண்ணியமும், பூஜாபலனும்

பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாரே.
 - திருமந்திரம் 144.

வினைகளை அனுபவிக்கும் பொருட்டு வினைகளை அளவிட்டு கொடுத்த இந்த உடம்பு, கொடுக்கப்பட்ட வினைகளை அனுபவித்து முடித்தவுடன் இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்துவிடும்.  நீ சம்பாதித்து கொடுத்த பொருளைக் கொண்டு இன்பதுன்பங்களை உன்னோடு அனுபவித்து வந்த உன் மனைவி, குழந்தைகள் நீ இறந்தவுடன் உன்னுடன் வரமாட்டார்கள். நீ செய்த அறச்செயலால் சேர்த்த புண்ணியமும், ஞானிகளை வணங்கி நீ சேர்த்த அருளும்தான் உன்னுடன் உன் ஆன்மாவுடன் வரும். மற்றதெல்லாம் உடன் வராது.
ஆகவே மனைவி மக்களோடு வாழ வேண்டும். ஆனால் அவர்களை சதமென்று, உண்மையென்று எண்ணக்கூடாது. முன் செய்த வினைகளுக்காக அவர்கள் உன்னுடன் இருக்கிறார்கள். கர்மா முடிந்தவுடன் நீங்கிவிடுவார்கள். அவர்களைவிட்டு விலகாமல் அவர்களோடு இருந்துகொண்டு இவ்வுலக வாழ்வை வாழ வேண்டும். மேலும் தான் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை அறவழியில் செலவிட்டு புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீ சேர்த்த புண்ணியமும், பூஜாபலனும்தான் இறந்தபிறகு ஆன்மாவோடு வரும். உடனிருந்தவர்கள் யாரும் உன்னுடன் வரமாட்டார்கள்.


No comments:

Post a Comment