Friday, 21 April 2017

இயற்கையை நேசிப்போம்

இந்த உலகம் இயற்கை அன்னையால் எல்லா உயிர்களும் மகிழ்ந்து வாழும்படியாகத்தான் படைக்கப்பட்டது. மனிதன் தனது அறிவு பலத்தினை இயற்கைக்கு எதிராக விஞ்ஞானம் என்ற பெயரில் பயன்படுத்தி எல்லா உயிர்களின் இன்பத்தை அழித்தான். தான் வாழ பிற உயிர்களின் மகிழ்ச்சியை அழித்தவன், இப்பொழுது பிறர் அழிந்தாலும் தான் நன்றாக வாழ வேண்டுமென்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டான். அவன் வளர்த்த விஞ்ஞானம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.
பிறருடைய தட்டில் உன்னுடைய உணவு இல்லை. பிறருடைய இருப்பிடத்தில் உன்னுடைய வீடு இல்லை. காற்று, தண்ணீர், ஆகாயம், மண், நெருப்பு எல்லோருக்கும் பொதுவானது. இதை தனதாக்கிக் கொள்ள போராடுகிறான்.
பகுத்தறிவு என்ற பெயரில் தன்னை படைத்த இயற்கையையும், தான் வாழ இந்த உலகத்தை படைத்த இயற்கையையும் மற்றும் பிற உயிரினங்களையும் மறந்தான். தான் மட்டுமே வாழ இவ்வுலகம் என்று எண்ணினான்.
இயற்கையை வென்ற இயற்கையோடு இயற்கையாக கலந்து ஜோதி ரூபத்தில் இருக்கும் முருகப்பெருமான் முதன்முதலில் கடவுளானவர். அவரை வணங்க மறந்தான். ஆறறிவினால் உணர்ந்து கொள்ள முடிந்தவைகளை மட்டுமே உண்மையென நம்பினான். முருகப்பெருமான் வழிவந்த கோடானுகோடி சித்தர்கள் இந்த உலகம் செழிப்படைய, மனிதர்குலம் செழிப்படைய பல்வேறு வழிகளை உண்டாக்க வைத்துள்ளார்கள். சித்தர்களை வணங்குவோம். இயற்கையை நேசிப்போம். பிற உயிர்களுக்கு இன்னல் தராது வாழக் கற்றுக்கொள்வோம். தான் சேர்த்த செல்வத்தில் ஒரு சிறு பகுதியை பிறர் வாழ கொடுத்து மகிழ்ச்சியடைவோம். அன்னதானம் செய்வோம். பிற உயிர்களில் குடி கொண்டுள்ள இறைவனை வணங்கக் கற்றுக்கொள்வோம்.

No comments:

Post a Comment