Saturday, 22 April 2017
அறம் என்றால் என்ன?
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று - குறள் எண்:49
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று - குறள் எண்:49
அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை - அறம் என்று சொன்னால் அது இல்வாழ்தல் ஆகும். அறத்தை
சிறப்பித்து சொன்னால் அது இல்வாழ்க்கை. அந்த இல்லறமும் எந்தவொரு குற்றமும்
இல்லாமல், யாரும் பழிக்காமல் இருந்தால் அதைவிட மேலானது ஒன்றும் இல்லை.
குடும்ப ஒற்றுமை, பண்புள்ள குழந்தைகளை பெறும் பேறு, நிறைந்த
செல்வம், விருந்தை உபசரித்தல், இல்லாள் துணையோடு அறம் செய்தல் இவையெல்லாம் நன்று
எனக்கூறுகிறார் தெய்வப்புலவர திருவள்ளுவர்.
ஆக, இல்லறமே நல்லறம் என்கிறார்.
Friday, 21 April 2017
புண்ணியமும், பூஜாபலனும்
பண்டம் பெய்கூரை பழகி விழுந்தக்கால்
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாரே.
உண்டஅப் பெண்டிரும் மக்களும் பின்செலார்
கொண்ட விரதமும் ஞானமும் அல்லது
மண்டி அவருடன் வழி நடவாரே.
- திருமந்திரம் 144.
வினைகளை
அனுபவிக்கும் பொருட்டு வினைகளை அளவிட்டு கொடுத்த இந்த உடம்பு, கொடுக்கப்பட்ட வினைகளை
அனுபவித்து முடித்தவுடன் இந்த உடம்பில் இருந்து உயிர் பிரிந்துவிடும். நீ சம்பாதித்து கொடுத்த பொருளைக் கொண்டு இன்பதுன்பங்களை உன்னோடு அனுபவித்து வந்த உன் மனைவி, குழந்தைகள் நீ இறந்தவுடன்
உன்னுடன் வரமாட்டார்கள். நீ செய்த அறச்செயலால் சேர்த்த புண்ணியமும், ஞானிகளை வணங்கி நீ சேர்த்த
அருளும்தான் உன்னுடன் உன் ஆன்மாவுடன் வரும். மற்றதெல்லாம் உடன் வராது.
ஆகவே மனைவி மக்களோடு வாழ வேண்டும். ஆனால் அவர்களை சதமென்று, உண்மையென்று எண்ணக்கூடாது.
முன் செய்த வினைகளுக்காக அவர்கள் உன்னுடன் இருக்கிறார்கள். கர்மா முடிந்தவுடன்
நீங்கிவிடுவார்கள். அவர்களைவிட்டு விலகாமல் அவர்களோடு இருந்துகொண்டு இவ்வுலக
வாழ்வை வாழ வேண்டும். மேலும் தான் சேர்த்த செல்வத்தில் ஒரு பகுதியை அறவழியில்
செலவிட்டு புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நீ சேர்த்த புண்ணியமும், பூஜாபலனும்தான் இறந்தபிறகு ஆன்மாவோடு வரும். உடனிருந்தவர்கள் யாரும்
உன்னுடன் வரமாட்டார்கள்.
இயற்கையை நேசிப்போம்
இந்த உலகம் இயற்கை அன்னையால் எல்லா உயிர்களும் மகிழ்ந்து வாழும்படியாகத்தான்
படைக்கப்பட்டது. மனிதன் தனது அறிவு பலத்தினை இயற்கைக்கு எதிராக விஞ்ஞானம் என்ற பெயரில்
பயன்படுத்தி எல்லா உயிர்களின் இன்பத்தை அழித்தான். தான் வாழ பிற உயிர்களின் மகிழ்ச்சியை
அழித்தவன், இப்பொழுது பிறர் அழிந்தாலும் தான் நன்றாக வாழ வேண்டுமென்று நினைக்கும் அளவிற்கு
வந்துவிட்டான். அவன் வளர்த்த விஞ்ஞானம் மனித குலத்திற்கே அச்சுறுத்தலாக உள்ளது.
பிறருடைய தட்டில் உன்னுடைய உணவு இல்லை. பிறருடைய இருப்பிடத்தில் உன்னுடைய
வீடு இல்லை. காற்று, தண்ணீர், ஆகாயம், மண், நெருப்பு எல்லோருக்கும் பொதுவானது. இதை
தனதாக்கிக் கொள்ள போராடுகிறான்.
பகுத்தறிவு என்ற பெயரில் தன்னை படைத்த இயற்கையையும், தான் வாழ இந்த உலகத்தை
படைத்த இயற்கையையும் மற்றும் பிற உயிரினங்களையும் மறந்தான். தான் மட்டுமே வாழ இவ்வுலகம்
என்று எண்ணினான்.
இயற்கையை வென்ற இயற்கையோடு இயற்கையாக கலந்து ஜோதி ரூபத்தில் இருக்கும்
முருகப்பெருமான் முதன்முதலில் கடவுளானவர். அவரை வணங்க மறந்தான். ஆறறிவினால் உணர்ந்து
கொள்ள முடிந்தவைகளை மட்டுமே உண்மையென நம்பினான். முருகப்பெருமான் வழிவந்த கோடானுகோடி
சித்தர்கள் இந்த உலகம் செழிப்படைய, மனிதர்குலம் செழிப்படைய பல்வேறு வழிகளை உண்டாக்க
வைத்துள்ளார்கள். சித்தர்களை வணங்குவோம். இயற்கையை நேசிப்போம். பிற உயிர்களுக்கு இன்னல்
தராது வாழக் கற்றுக்கொள்வோம். தான் சேர்த்த செல்வத்தில் ஒரு சிறு பகுதியை பிறர் வாழ
கொடுத்து மகிழ்ச்சியடைவோம். அன்னதானம் செய்வோம். பிற உயிர்களில் குடி கொண்டுள்ள இறைவனை
வணங்கக் கற்றுக்கொள்வோம்.
Subscribe to:
Comments (Atom)
