Sunday, 2 July 2017

மெய்ஞானத்திற்கு தடை

மெய்ஞானத்தை நோக்கி செல்ல விடாமல், உலக விஷயங்கள் தடுக்கின்றன. இந்த நிலையை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் தாண்ட விடாது. இந்த உலக விஷயங்கள் ஒரு மனிதனுக்கு தடையாய் இருக்கிறதென்றால், அவன் இன்றும் மெய்ஞானத்தின் மேல் உறுதியாக இருக்கவில்லை, மெய்ஞானத்தை இறுக பற்றவில்லை, வைராக்கியம் இல்லை என்று அர்த்தம். உலக விஷயங்கள் இன்னும் அவனைப் பிடித்து இழுக்கிறது என்றால், அவன் மெய்ஞானத்தை நோக்கும்போது அவனுள் இருக்கும் உலக விஷயங்கள் தடையாய் இருக்கிறது. அவனுள் இருக்கும் உலக விஷயங்களில் இருந்து விடுபட வேண்டும், அவனுள் இருக்கும் உலக விஷயத்தை நீக்க வேண்டும்.
பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து சொல்ல ஓடம் அவசியம். அதுபோன்றுதான் பிறவிக் கடலை கடக்க இந்த தேகத்தை பாதுகாக்க தேகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவசியம். ஆனால் உடலின் அனுபவத்தினால் கேட்கின்ற விஷங்களில் விழுந்துவிடக் கூடாது. அறிவு சொல்வதை ஆத்மா கேட்க வேண்டும். உடல் சார்ந்த அனுபவத்தை கொண்ட மனம் சொல்வதை ஆத்மா கேட்கக் கூடாது. முட்டை ஓட்டோடு பறவை குஞ்சின் தொடர்பு என்னவோ, அதுபோல நாம் இந்த உடல் சார்ந்த விஷயங்களிலே கவனமாக இருக்க வேண்டும். உடலை பேண உடல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அந்த அனுபவத்தினால் வருகின்ற இன்பத்தை மனம் கேட்கிற வழியில் செல்லக்கூடாது. மெய்ஞான வாழ்வை மட்டுமே வாழ வேண்டும். இறைவனை பற்றிய விசாரங்கள், மெய்ஞான தேடல்கள், மெய்ஞான நூல்களை படித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
     கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
     நற்றாள் தொழாஅர் எனின்.
                     - திருக்குறள்.
கற்றதன் பயனே இறைவனை வணங்குவதுதான். அப்படி வணங்கவில்லையென்றால் கற்ற கல்வியினால் யாதொரு பயனுமில்லை என்கிறார் திருவள்ளுவர்.

No comments:

Post a Comment