Tuesday, 4 July 2017

அறிவு

அறிவு
சித்தர்கள் ஆசி பெற்றால் நமது அறிவு சொல்வதை, நமது மனம் கேட்கும். உலகியலில் பற்றுக் கொண்டு, ஆசை கொண்டு, உறவு எனும் பாசத்தில் வீழ்ந்து, உடல் சார்ந்த இன்பங்களிலே சிக்கிக்கொண்டு வாழ்வதை விட்டுவிட்டு, இதனை தாண்டி வெளியே வந்து ஞானம் என்ற ஒன்றை தானாக சிந்திப்பது மிகவும் கடினம். அது சித்தர்களின் துணையிருந்தால் முடியும்.
தினந்தோறும் சித்தர்கள் அருளிய ஞானக் கருத்துக்களை கேட்டும், சிந்தித்தும், அதைப் பற்றி பேசிக்கொண்டும் இருக்க இருக்கத்தான், அறிவு எனும் வெளிச்சம் உண்டாகும். தொடர்ந்து சிந்திக்க, பேச, படிக்க சிந்தனை வெளிச்சம் உண்டாகும். அந்த வெளிச்சத்திலே உள்ள அறிவு சொல்வதை மனம் கேட்கும்.

 சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
      நன்றின்பால் உய்ப்ப தறிவு.   
- திருக்குறள்.
மனத்தை சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

Sunday, 2 July 2017

மெய்ஞானத்திற்கு தடை

மெய்ஞானத்தை நோக்கி செல்ல விடாமல், உலக விஷயங்கள் தடுக்கின்றன. இந்த நிலையை தாண்டி செல்ல வேண்டும். ஆனால் தாண்ட விடாது. இந்த உலக விஷயங்கள் ஒரு மனிதனுக்கு தடையாய் இருக்கிறதென்றால், அவன் இன்றும் மெய்ஞானத்தின் மேல் உறுதியாக இருக்கவில்லை, மெய்ஞானத்தை இறுக பற்றவில்லை, வைராக்கியம் இல்லை என்று அர்த்தம். உலக விஷயங்கள் இன்னும் அவனைப் பிடித்து இழுக்கிறது என்றால், அவன் மெய்ஞானத்தை நோக்கும்போது அவனுள் இருக்கும் உலக விஷயங்கள் தடையாய் இருக்கிறது. அவனுள் இருக்கும் உலக விஷயங்களில் இருந்து விடுபட வேண்டும், அவனுள் இருக்கும் உலக விஷயத்தை நீக்க வேண்டும்.
பாதுகாப்பாக ஆற்றைக் கடந்து சொல்ல ஓடம் அவசியம். அதுபோன்றுதான் பிறவிக் கடலை கடக்க இந்த தேகத்தை பாதுகாக்க தேகம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் அவசியம். ஆனால் உடலின் அனுபவத்தினால் கேட்கின்ற விஷங்களில் விழுந்துவிடக் கூடாது. அறிவு சொல்வதை ஆத்மா கேட்க வேண்டும். உடல் சார்ந்த அனுபவத்தை கொண்ட மனம் சொல்வதை ஆத்மா கேட்கக் கூடாது. முட்டை ஓட்டோடு பறவை குஞ்சின் தொடர்பு என்னவோ, அதுபோல நாம் இந்த உடல் சார்ந்த விஷயங்களிலே கவனமாக இருக்க வேண்டும். உடலை பேண உடல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் அந்த அனுபவத்தினால் வருகின்ற இன்பத்தை மனம் கேட்கிற வழியில் செல்லக்கூடாது. மெய்ஞான வாழ்வை மட்டுமே வாழ வேண்டும். இறைவனை பற்றிய விசாரங்கள், மெய்ஞான தேடல்கள், மெய்ஞான நூல்களை படித்தல் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
     கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
     நற்றாள் தொழாஅர் எனின்.
                     - திருக்குறள்.
கற்றதன் பயனே இறைவனை வணங்குவதுதான். அப்படி வணங்கவில்லையென்றால் கற்ற கல்வியினால் யாதொரு பயனுமில்லை என்கிறார் திருவள்ளுவர்.

மாயை

மாயை
மாயை மிக வலியது. ஏதாவது ஒன்றிலிருந்து விடுபட்டு மேலே ஏறினால் வேறொன்று பிடித்திழுக்கும். அப்படி பிடித்திழுப்பதைக் கூடி அறியாத அளவு அறிவு மயங்கியிருக்கும். இவ்வுலகில் இருக்கும் அனைத்தும் அநித்தியம். அறம் ஒன்றே நித்தியம். அறத்தை போன்று மிக வலிமையான ஆயுதம் ஒன்றுமில்லை என திருவள்ளுவர் கூறுவார். எதை சரியென்று அறிகின்றோமோ அதை தவறு என்று அறியும்போது இன்னொன்று பற்றிக் கொள்ளும். ஒன்றை விட்டால் ஒன்று பற்றிக் கொள்ளம். எல்லாவற்றையும் அறிந்து தெளிந்து வாழ நமக்கு காலம் போதாது.
இதற்கு எல்லாவற்றையும் அறிந்து வென்ற சித்தர்களை வணங்கி வந்தாலே போதும். அதுதான் சரியான வழி. இதைத்தவிர வேறு வழியில்லை. இன்று சரியென்பது நாளை தவறு என்பார்கள் விஞ்ஞானிகள். பிளாஸ்டிக்கை கண்டுபிடித்தபோது எல்லோரும் வியந்தார்கள். ஆனால் இன்று அந்த பிளாஸ்டிக் வேண்டாம் என்று அந்த விஞ்ஞானிகளே கூறுகிறார்கள்.
தனது அறிவை நம்பினால் என்றாவது ஒருநாள் மாயையின் பிடிபட்டுக் கொள்வான். தன்னைவிட உயர்ந்தவர்களான சித்தர்களை வணங்கினால் அவர்களது அருள் உன்னை வழிநடத்தும், காப்பாற்றுவோம், மாயையற்ற வாழ்க்கைக்கு உன்னை அழைத்துச் செல்லும்.

நீடிய ஆயுள், மனஅமைதி, ஆரோக்கியம், நிறைந்த செல்வம் இவற்றைக் கொண்டு வாழ இயலாது. சித்தர்களின் துணையும் வேண்டும். அதுதான் உண்மையான செல்வம்.